Friday, January 30, 2009

தெரியாது

சிறுகதை


அந்த வீடு நகரத்திலிருந்து தள்ளி அதிக தூரமுமில்லாமல் அதிக அருகிலுமில்லாமல் இருந்தது. ஒரு மத்திய தர வர்க்கத்தினரின் வீட்டை விடப் பெரிதாகவும் அகண்ட தோட்டத்துடனும் தோற்றமளித்தது. அந்த வீட்டுக்காரரின் ரசனையை பறைசாற்றும் விதமாய் அழகழகான பூக்கள் வீட்டை சுற்றி பூத்திருந்தன.


"யாருடைய வீடு இது?" என்றேன். ரகு இப்போதும் மர்மமாய் சிரித்தான். காலையிலிருந்து இதே சிரிப்புத்தான். வீட்டில் விடுமுறைதினத்தை டி. வீ.பார்த்துக்கொண்டே இன்பமாய் கழித்துக் கொண்டிருந்தவனிடம் வந்து அவசரமாய் ஓரிடத்திற்கு போக வேண்டும் என்று அழைத்தான். என்ன எது என்று சொல்லாமலே "சொல்கிறேன் வா" என்று சொல்லிச் சொல்லியே புறப்பட வைத்துவிட்டான்.


"எங்கே போகிறீர்கள்?"என்று அரற்றிய என் மனைவியிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் "இரு,இரு...இப்ப வந்திருவேன்" என்றபடி அவளது அடுத்த கேள்வி வருவதற்குள் வீட்டை விட்டு வெளியே பாய்ந்தேன்.

ரகு எப்போதும் இப்படித்தான். எங்காவது போகவேண்டும் என்றால் என்னைத்தான் துணைக்கு இழுத்துக்கொண்டு போவான். எங்கே போகிறோம் என்று கூட சொல்லமாட்டான். சொன்னால் சிலவேளைகளில் நான் வரமாட்டேன் என்று நினைக்கிறானோ தெரியவில்லை. ஆனால் தொண்ணுற்று ஒன்பது வீதம் அவன் அழைத்து நான் போகாமல் இருந்ததில்லை.

அவன் பைக்கில் பின்னால் தொற்றிக் கொண்டேன்.

"இன்று உனக்கு முக்கியமான நாள்!" என்றான் ரகு.

"முக்கியமான நாளா? எனக்கா?"


"ஆமாம், அன்றைக்கு உன் வாழ்க்கையின் லட்சியம் என்னவென்று சொன்னாய்?"


நான் யோசித்தேன். 'வாழ்க்கையின் லட்சியமா? என்னவென்று சொல்லியிருப்பேன்? பல இடங்களில் பல பேருக்கு பல மாதிரி சொல்லியிருக்கிறேன். இவனுக்கு என்ன சொன்னேன்?!


"என்னவென்று சொன்னேன்?"


"அடப்பாவி நீயே மறந்துவிட்டாயா? லட்சியமெல்லாம் மறக்கக்கூடிய விசயமாடா? சரி...நீ மறந்தாலும் நான் மறக்கவில்லை. உன் லட்சியம் ஈடேற உனக்கு நான் உதவப்போகிறேன்!"
"டேய், குழப்பாதடா, என்னடா என் லட்சியம்?"
"பொறு. பைக்கை விட்டுவிட்டு வந்து சொல்கிறேன்" அவன் பைக்கை மூடிக் கிடந்த எங்கள் அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தினான்.
"என்ன, பைக்கை விட்டுவிட்டு வரப் போகிறாயா?அப்படிஎன்றால் நாம் எப்படி போவது?"
"பொறு, அவசரப்படாதே!" பைக்கை உள்ளே விட்டு பூட்டிவிட்டு வந்தான்.
நான் இந்த நகரத்திற்கு வந்து மூன்று வருடங்களாகிவிட்டன. ஆனால் ரகு எனக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் அறிமுகமானான். என் அலுவலகத்திற்கு ஒரு கிளார்க்காக நியமனம் பெற்று வந்தான். நல்ல கலகலப்பானவன். செய்யும் தொழிலுக்கேற்ப சிறந்த வாயாடன். திருமணமாகி ஆறு வயதில் ஒரு மகளும் உண்டு. சம்பளம் பெரியளவில் இல்லை என்றாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்துவிடத் துடிக்கும் ஆர்வம் அவனது வார்த்தைகளில் தெறிக்கும். அவனது கருத்துகளில் பெரும்பாலானவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவன் பேசுவதைக் கேட்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிரெதிர் முனைகள்தானே ஒன்றை ஒன்று கவரும். அதனாலேயே குறுகிய காலத்திலேயே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்.
"கொஞ்சம் பொறு, வீட்டுக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன்."
எத்தனை பொறு! என்னால் பொறுக்க முடியவில்லை. ஒருவேளை தன் வீட்டிற்கு என்னை கூட்டிக் கொண்டு போகிறானோ? நாங்கள் பழகத் தொடங்கி ஒரு வருடமாகியும் அவன் தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றதில்லை. அலுவலகம், பார் ,சினிமா என்ற வட்டத்திற்குள்ளேயே எங்கள் நட்பு ஓடிக் கொண்டிருந்தது. என் வீட்டிற்கு அவன் வருவது கூட அரிதுதான். வந்தாலும் வெளியே நின்றுதான் கூப்பிடுவான்.
ரகு மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தான்.
"மீரா, நான் நேற்றுச் சொன்ன மாதிரி இன்றைக்கு மத்தியானம் வரமாட்டேன். நான் வர இரவாகிவிடும். நீர் உம் பிரன்ட் வீட்டுக்கு போறதென்றால் போய் வாரும். வினோக்குட்டி எங்கே?"
"....."
"ஆங்...பாட்டி வீட்டிலேயே நிற்கட்டும். சரி அப்புறம் போன் பண்றன்."
அடப்பாவி! அப்ப அவன் வீட்டுக்கும் இல்லையா? எங்கதான் கூப்பிடுகிறான்? பாருக்கா? பாருக்கு போறதுக்கெல்லாம் இவ்வளவு சுத்தி வளைக்க மாட்டானே!
"இப்ப ஒரு ஆட்டோ பிடிக்க வேண்டும்" என்றான் ரகு.
"ஆட்டோவா? ஆட்டோவில அப்படி எங்கதாண்டா கூட்டிப் போறாய்?"
"கொஞ்சம் கேள்வி கேட்கறதை நிப்பாட்டுறாயா ?"
ஒரு ஆட்டோவில் பிரயாணித்தோம். இறங்கிய இடம்தான் அந்த மத்திய தரவர்க்க வீடு.
"யாருடைய வீடு இது?" என்ற என் அடக்க முடியாத கேள்விக்கு பதில் சொல்லாமல் மறுபடியும் மர்மப் புன்னகை பூத்தான்.
"உள்ளே வா. தெரிந்து விடும்!"
இரண்டு மூன்று கட்டிப் போட்ட அல்செசன்கள் எங்களை முறைத்தன. வீட்டின் முன் ஹோல் ஒரு ரிசப்சன் அறை போல தோற்றமளித்தது. போடப் பட்டிருந்த குசன் இருக்கைகளின் நுனியில் இருவர் அமர்ந்து எங்களைப் பார்த்து திருட்டு முழி முழித்தனர். ஒரு பெண் கவுன் அணிந்து குறுக்காக நடந்து போனாள். இது ஏதாவது அலுவலகமா? வெளியில் ஒரு பெயர் பலகையை கூட காணவில்லையே.
ரகு ரிசப்சன் மேசையை அணுகி ஏதோ பேசினான். நான் ஒரு ஆசனத்தில் அமர்ந்து அவன் வரும் வரை காத்திருந்தேன். சற்று நேரத்தில் திரும்பி வந்தான். அருகில் அமர்ந்தான். புன்னகைத்தான்.
"டேய், உன் சிரிப்பை நிறுத்திவிட்டு சொல்கிறாயா?'
"இரு, பறக்காதே, சொல்கிறேன். நான் உன்னை அன்றைக்கு உன் லட்சியம் என்னவென்று கேட்டதற்கு ஒரு பெரிய பணக்காரனாக வருவேன் என்றோ அல்லது ஏதாவது ஒரு சாதனை செய்யப்போகிறேன் என்றோ சொல்வாய் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்தாலே அது ஒரு சாதனைதான். அதுதான் உன் லட்சியம் என்று சொன்னாய். அப்பவே நீ என் பக்கமாக வந்துவிட்டாய் என்று புரிந்து கொண்டுவிட்டேன். அதற்குத்தான் நான் உனக்கு உதவி செய்யப் போகிறேன்."
"ஒ, அதுவா? எப்படி?"

"இது என்ன இடம் தெரிகிறதா?"
"தெரியலியே?"
"நீ உன் வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் பார்க்கப் போகும் இடம். உலகின் மிகப் பழமையான தொழில் நடக்கும் இடம். பணம் கொடுத்தால் சந்தோசம் கிடைக்கும் இடம். பச்சையாகச் சொன்னால் விபச்சார விடுதி!"
நான் துள்ளி எழுந்தேன்.
"டேய், விளையாடாதே!"
"உண்மையாகத்தான் சொல்கிறேன். நேற்றே நம்ம இரண்டு பேருக்கும் இரண்டு பெண்களை புக் பண்ணி விட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த இரண்டு பேரும் வந்துவிடுவார்கள். "
அவன் வார்த்தைகளில் தெரிந்த உண்மையின் தீவிரம் எனக்கு உறைத்தது.
"வாடா,போயிருவோம்" என் குரல் கோபத்தில் நடுங்கியது.
"வினோத், இரு, அவசரப்படாதே. இப்படி ஒரு சான்ஸ் இனி உனக்கு கிடைக்காது."
"இப்ப நீ வரப் போறியா,இல்லையா?"
"வினோத், சொல்றதக் கேளு...எல்.." அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்க நான் சடாரென வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ரகு பின்னாலேயே ஓடி வந்தான்.
அப்போது எதிரில் ஒரு தடியன் வந்தான்.
"என்ன சார், எங்க போறீங்க?"
ரகு அவசரமாய் புன்னகைத்தான். "ஒரு இடமும் இல்லை சார். இவன் கொஞ்சம் பயப்படுறான்."
அவன் சிரித்தான். "ஏன் சார் பயப்படுறீங்க? போலீஸ் வந்திரும் என்றா? இதை நடத்துறதே ஒரு போலிஸ்காரர்தான் சார்."
"ரகு, நீ இருந்திட்டு வா. நான் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போகிறேன்."
நான் மேலும் நடந்தேன். ரகு அந்தத் தடியனிடம் ஏதோ சமாதானம் சொல்லி விட்டு பின்னாலேயே ஓடி வந்தான்.
"வினோத், வினோத், கோவிக்காதடா, உன்னிடம் முதல்லேயே சொல்லாதது தப்புத்தான். சொன்னால் வரமாட்டாய் என்று தெரியும்" அவன் சொல்லிக் கொண்டே வந்தான்.
நாங்கள் வெளியே வந்து ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து ஒதுங்கியிருந்த மேசை ஒன்றில் அமர்ந்தோம். கொஞ்ச நேரம் அமைதி. அந்த ஹோட்டலின் 'நாக்கு மூக்கா' இரைச்சலுக்குள் நான்தான் மறுபடியும் ஆரம்பித்தேன்.
"கோபம் ஒன்றுமில்லடா. நீ என்னை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் மனவருத்தமாக இருக்கிறது. அங்க போறது உன் விருப்பம். நீ போறதில என் கொள்கைகளை சொல்லி உன்னைத் தடுக்க முடியாது. ஆனால் நான் என் மனைவிக்கு துரோகம் செய்வேன் என்று நீ எப்படி முடிவு செய்யலாம்?"
ரகுவின் முகம் இப்போது சீரியசாகியது.
"அப்படியென்றால் நான் மனைவிக்கு துரோகம் செய்கிறேன் என்கிறாயா? இதெல்லாம் யாருடா துரோகம் என்று சொன்னது? நான் என் மனைவிக்கு என் குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும் செய்கிறேன். அவளும் சந்தோசமாகத்தான் இருக்கிறாள். கணவனாக நான் என் கடமையை சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறேன். "
எனக்கு சிரிப்புத்தான் வந்தது.
"கணவனாக கடமையை செய்கிறாயா? ஒரு ஒழுங்கான கணவன் செய்யும் வேலையா இப்ப நீ செய்யப் போறது?"
ரகு தன் தலையில் கை வைத்தான்.
"இன்னும் நீ எம். ஜி. ஆர். காலத்திலேயே இருக்கிறாய், மச்சான். நான் சொல்வதை நன்றாகப் புரிந்து கொள். செக்ஸ் என்றால் என்னடா? இனப் பெருக்கத்திற்கான ஒரு ஊடகம். அதை ஏன் நீ இவ்வளவு உணர்வு பூர்வமாக எடுத்துக் கொள்கிறாய்? இந்த மனித சமுதாயம்தான் திருமணம் என்ற சடங்கு நிலைச்சிருக்க வேண்டும் என்பதற்காக கல்யாணம் செய்தால் மட்டுமே நீ செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பிளாக்மெயில் செய்கிறது. எனக்கு திருமண உறவில் நம்பிக்கை இருக்கிறது. அது இருந்தால் சமுதாயம் ஒரு கட்டுக் கோப்புடன் இருக்கும். ஆனால் செக்ஸ்சை அதற்கு பணயப் பொருளாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காதல் வேறு. காமம் வேறு. நான் என் மனைவியை காதலிக்கிறேன். ஆனால் இங்கே ஒரு பெண்ணுடன் வெறும் செக்ஸ்சைத்தான்..."
"கொஞ்சம் நிறுத்துகிறாயா?" என் குரல் என்னை மீறி சற்று உரத்து ஒலிக்க பக்கத்து மேசைகள் திரும்பிப் பார்த்தன. குரலைத் தணித்தேன்.
"மடையா, உன் காம ஆசைக்கு ஏற்ற மாதிரி நீ நியாயங்களை கண்டு பிடித்துக் கொண்டே போவாய். நம்மால் மற்றொருவருக்கு எதுவித துன்பமும் வரக் கூடாது என்பதை நீ ஏற்றுக் கொள்கிறாயா?"
"அது சரி. நான் இங்கே போறதால் யாருக்கு என்ன துன்பம் வரப் போகுது?"
"இது உன் மனைவிக்கு தெரிந்தால் என்னவாகும் என்று யோசித்தாயா? துரோகம் அது இது என்ற வார்த்தைகளை விட்டு விடுவோம். நீ சொல்லும் நியாயங்கள் நீ வளர்ந்த சூழலில் பெற்ற அறிவின்படி உனக்கு சரியாய் தோன்றலாம். ஆனால் அதை நீ நடைமுறை படுத்த வேண்டும் என்றால் நீ தனி ஆளாய் இருந்திருக்க வேண்டும். உன்னைக் கேட்பதற்கு ஆளிருந்திருக்க மாட்டார்கள். உன் மனைவிக்கு இது தெரிந்து துரோகம் என்று சண்டை பிடிப்பது கூட உன் 'நவநாகரீக பகுத்தறிவுக்கு' முட்டாள்த் தனமாய்த் தெரியலாம். ஆனால் உன் மனைவிக்கு அந்தளவுக்கு 'பரந்த மனசு' இல்லையே. அதனால் உன் செயலை நினைத்து அதனால் இப்போதைய சமுதாயத்தில் கிடைக்கப் போகும் கெட்ட பெயரை அவமானத்தை நினைத்து அவங்க எவ்வளவு வேதனைப் படுவாங்க? தன்னில் எதோ குறை இருக்கலாம் என்று கூட அவங்க எண்ணிவிடலாம். சரியோ தவறோ...உன்னை நம்பி வந்த உன் துணையை நீ மன உளைச்சலுக்கு துன்பத்திற்கு உள்ளாக்கலாமா?"
ரகு இப்போது சற்று யோசனையில் ஆழ்ந்தான்.
"நீ சொல்றது சரிதான். ஆனால் மற்றவர்களுக்கு துன்பம் தராமல் நாம் எந்தக் காரியத்தையும் செய்யலாம் என்பதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? கவனி, நான் இங்கே போவது இது முதல் தடவை இல்லை. ஆனால் இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது. இனிமேலும் யாருக்குமே தெரியவராது. அதனால் என் மனைவிக்கு தெரிய வராதவரை அவளுக்கு அதனால் துன்பம் இல்லைத்தானே?"
இம்முறை நான் என் தலையில் கை வைத்தேன்.
"இப்ப நான் என்ன செய்யவேண்டும் என்கிறாய்?"
ரகு சிரித்தான்.
"கோவிக்காதடா. நீ என்னுடன் வா. வந்து ரிசப்சனில் அமர்ந்திரு. நான் மட்டுமாவது போய் வருகிறேன்."
"அப்ப நீ போய்த்தான் ஆகவேண்டும்?"
ரகு மறுபடியும் சிரித்தான். ஆற்றில் இறங்கியாகி விட்டது. இனி நீந்தித்தானே ஆகவேண்டும். மறுபடியும் அவனுடன் அவனது சொர்க்க வாசலுக்குள் நுழைந்தேன்.
ரிசப்சன்காரன் சிரித்தான்.
"என்னவாம் சார், சரியா?"
"இல்ல, நான் மட்டும்தான். அந்த இரண்டு பெண்களும் வந்துவிட்டார்களா?"
"ஒருத்திதான் வந்திருக்கா. மூன்றாம் நம்பர் ரூமில இருக்கிறா. நீங்க போங்க. அதுதான் அவருக்கு வேண்டாம்தானே?" என்றான் ரிசப்சன் என்னைப் பார்த்து கேலியாய்.
ரகு ஏதோ தன் சொந்த வீட்டுக்குள் போவது போல உள்ளே போய்விட்டான். நான் அந்த ஆசனத்தில் அமர்ந்து வாழ்க்கையில் முதன்முறையாக இப்படியொரு காத்திருப்பை செய்ய ஆரம்பித்தேன்.
சற்று நேரம் கழிந்ததும் ரிசப்சனில் இருந்தவன் சிறு புன்னகையுடன் வந்து என்னருகில் அமர்ந்து கொண்டான்.
"என்ன சார், புதுசா?"
"எதுக்கு?"
"இல்ல...ஒரு தடவையாவது ட்ரை பண்ணினதில்லையா?"
"எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது!"
"என்ன சார், கல்யாணம் ஆனவங்கதான் நிறையப் பேர் இங்க வர்றாங்க!"
"அது அவங்கவங்க இஷ்டம். எனக்கு பிடிக்கல." என்றேன் சற்று கடுமையான குரலில்.
அவன் ஏதோ யோசனையுடன் பெருமூச்சு விட்டான்.
"ஏன் சார், நீங்க ப்ளூ பிலிம் எல்லாம் பார்ப்பீர்களா?"
நான் சற்று திடுக்கிட்டேன்.
"ஏன் கேட்கிறீங்க?"
"இல்ல, சில பேர் ப்ளூ பிலிம் எல்லாம் பார்ப்பாங்க. ஆனால் இங்க வரதமட்டும் கேவலமாக பேசுவாங்க. நீங்க ப்ளூ பிலிம் பார்க்கும்போதே உங்க கற்பு அழிந்து விடும். உடலளவில் மட்டும் தான் நீங்க சுத்தமாக இருப்பிங்க. என்ன சொல்றீங்க?"
யப்பா... ஆளாளுக்கு தங்களுக்கு ஏற்ற மாதிரி நியாயங்கள் வைத்திருக்காங்கப்பா! எனக்கு இந்த வாதத்தை மறுபடி ஆரம்பிப்பதில் ஆர்வமில்லை. பேச்சை மாற்றினேன்.
"ரகு இரண்டு பேரைத்தானே புக் பண்ணியிருந்தான். மற்றப் பெண் வந்தாங்களா?"
அவன் சடாரென எழுந்தான். "இதோ வந்திட்டாங்க"
ஒரு பெண் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தாள். சேலை அணிந்திருந்தாள். நடையில் ஒரு அவசரம் தெரிந்தது. அவள் எங்களை நெருங்க நெருங்க எனக்குள் எதோ உறைத்தது. இவள்...இவள்...
அவள் நேராக ரிசப்சன்காரனிடம் வந்தாள். இருவரும் எனக்கு கேட்காத தூரத்தில் ஒதுங்கினார்கள். அவள் ஏதோ கேட்பதும் அவன் உதட்டை பிதுக்கிக் கொள்வதும் தெரிந்தது. பின் அவன் ஏதோ சொல்ல அவள் திரும்பி என்னைப் பார்த்தாள்.
இவள்...இவள்...யார் இவள்? எங்கேயோ இவளைப் பார்த்திருக்கிறேனே?
அவள் திரும்பி வாசலை நோக்கி நடந்தாள். போகிறாளா?
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த ரிசப்சன் அருகில் வந்தான்.
"என்ன சார் பார்க்கிறீங்க, அவங்களைத்தான் உங்களுக்கு புக் பண்ணியிருந்தது. நீங்கதான் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களே !"
ஐயோ, இவளா? அழகாகத்தான் இருக்கிறாள். ஒரு நிமிடம் என் மனது சபலப் பட்டாலும் அதை விட இவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் தான் மேலோங்கியிருந்தது.
"இவங்க எந்த ஊர்?" என்றேன். அவன் தன் முகத்தில் சந்தேகக் குறியுடன் என்னைப் பார்த்தான்.
"ஏன் கேட்கிறீங்க?"
"சும்மாதான். எப்படித்தான் மனம் வந்து இந்தத் தொழிலில் இறங்குகிறார்களோ..."
அவன் மறுபடியும் என்னருகில் அமர்ந்தான்.
"சார், இந்த மாதிரி பொம்பிளைகளுக்கு இந்தத் தொழில் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கு. முக்கியமா பணம்தான். குறைந்த நேரத்தில் நிறைந்த பணம். சே...! பேசாம பொம்பிளையாகப் பொறந்திருக்கலாம்!"
"இப்ப வந்தவங்களப் பற்றி தெரியுமா? ஏன் அவங்க வந்தாங்க?"
"அவங்களா? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவங்க கல்யாணம் ஆனவங்க. அவங்க புருஷன் கலியாணத்திற்கு அப்புறம் வேலைக்கு போக விடவில்லையாம்... அத்தோட தன் வீட்டுக் காரங்களுக்கு உதவி செய்யவும் விடுறதில்லையாம். அதனால் தன் தங்கச்சிகளின் படிப்புக்கு காசு வேண்டும் என்று புருஷனுக்குத் தெரியாம இங்க அப்பப்ப வந்து போவாங்க...."
எனக்கு அவனிடம் அவளைப் பற்றி கூடுதல் விபரங்கள் அறிய ஆவலாய் இருந்தாலும் அவனுக்கு என் மேல் சந்தேகம் வரலாம் என்பதால் விட்டுவிட்டேன்.
சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் ரகு ஆற அமர வந்தான். முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை தெரிந்தது.
வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். ரகு ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். ஆனால் எனக்கு அந்தப் பெண் யார் என்பதிலேயே கவனம் இருந்தது. அவளை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருக்கிறோம். ஆனால் எங்கே?
எங்கள் அலுவலகம் வந்தவுடன் ஆட்டோ நின்றது. இருவரும் இறங்கினோம். ரகு பர்சைத் திறந்து காசைக் கொடுத்தான். மை காட்!
எனக்கு பளீரென முகத்தில் அறைந்தது அது. இவன் பர்சில் இருக்கும் போட்டோவில்தான் அவளது முகத்தை பார்த்திருக்கிறேன். அப்படியென்றால்...
அது ரகுவின் மனைவி!
"என்னடா, அப்படியே சிலை போல நிற்கிறாய்?" பைக்கை எடுத்துக் கொண்டு வந்த ரகு கேட்டான்.
"ஒ...ஒன்றுமில்லடா..." திணறினேன். ரகு பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். பின்னால் ஏறிக் கொண்டேன்.
"என்னடா, ஏதாவது பிரச்சனையா?"
ஏதோ தீர்மானித்தவனாக தலையாட்டினேன்.
"இல்லடா. நீ சொன்னதப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். நீ சொன்னது சரிதான். எந்தத் தப்பும் யாருக்கும் தெரியாதவரைக்கும் யாருக்குமே துன்பம் இல்ல!"


*******************

I AM ADAM GOD...

HELLO...MY DEAR PEOPLE...!

I LIKE TO SPEAK LOT WITH YOU AND LIKE TO SHARE LOT OF MY FEELINGS. HOWEVER I PREFER TO GET FEEDBACK LOT THAN WHAT I TALK TO YOU...DEFINITELY. MY BLOG WILL BE LTTLE BIT OF DIFFERENT THAN AMONG THE OTHERS. YOU MIGHT NOT ACCEPT WHAT I SAY. SOMETIMES YOU COULD NOT ENDEAVOUR MY OPINIONS...GOOD...I PREFER THE WAVES OF A SEA THAN THE SILENT GARBAGE GUTTER..OK...SHALL WE START...?