
பெண்கள்
யப்பா..! இவர்களைப் பத்தி பேசிப் பேசியே மாய்கிறார்கள்! அப்படி என்னதான் ஸ்பெஷல் இவர்களிடம் இருக்கிறது அப்படிப் பேசுவதற்கு? பெண் விடுதலை என்கிறார்கள். ஆணாதிக்கம் என்கிறார்கள். அடிப்படையில் அவை என்னவென்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் முழிப்பார்கள். கட்டுரைகளிலும் கவிதைகளிலும் காவியங்களிலும் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்; ஒடுக்கப்பட்டாள் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் போட்டு முழங்கும் 'அறிவுஜீவிகள்' சற்று கவனமாக கோபப்படாமல் முக்கியமாக பதட்டப்படாமல் தொடர்ந்து வாசிக்கவும். ஏனென்றால் நானும் ஒரு பெண்ணிடமிருந்து பிறந்தவன்தான். தயவு செய்து தொடர்ந்து வரும் வசனங்களை ஆணாதிக்க வெறி பிடித்த ஒரு ஆடவன் எழுதுகிறான்; இவன் சொல்வதற்க்கெல்லாம் எப்படி எதிர்வாதங்கள் வைக்கலாம் என யோசித்துக்கொண்டே வாசிக்காதீர்கள். உங்கள் அப்பா (அதாவது உலகிலேயே உங்களுக்குப் பிடித்த ஆணாதிக்க வெறி இல்லாத ஒரே ஒரு நபர்) சொல்கிறார் என நினைத்துக்கொண்டு தொடருங்கள்.
உலகத்தில் பெண்கள் துன்பபடுகிறார்கள். ஏற்றுக் கொள்கிறேன். அப்படியென்றால் ஆண்கள்? சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்களா?இல்லைத்தானே? அப்படியிருக்க ஏன் பெண்கள் மட்டும் தாங்கள் துன்பப் படுவதை தூக்கிப் பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்? சரி, ஆண்களால்தான் பெண்களுக்கு நிறையத் துன்பம் என்று சொல்லப் போகிறீர்கள். அப்படியென்றால் பெண்களால் ஆண்களுக்கு துன்பமே வந்ததே இல்லையா? அதற்காக எப்போதாவது ஆண்கள் ஐயோ பெண்களால் எங்களுக்கு துன்பம் என்றும் பெண்ணாதிக்கம் , ஆண் விடுதலை என்றும் கோஷம் போட்டுக்கொண்டு அலைகிறர்களா? இல்லையே ...! அப்படியிருக்க, உங்களுக்கு மட்டும் ஏன் எந்த கொலை வெறி? ( வடிவேல் பாணியில் வாசிக்கவும்).
ஒரு மனிதப் பிராணி... அது ஆணோ பெண்ணோ இருவருக்கும் எதிர்ப்பாலால் மட்டுமல்ல எந்த உலகத்தின் பல காரணிகளால் பல்வேறு துன்பங்கள் வரத்தான் செய்கின்றன. நம் தேவைகளை நிறைவேற்ற முயலும் போது அருமையான வளங்களை கொண்ட இந்த பஞ்ச பூமியில் துன்பப்பட்டுத்தான் வாழ வேண்டியிருக்கிறது. அதற்காக சும்மா... சும்மா...ஆண்கள் வில்லன்கள் ...நாங்கள் எல்லாம் உத்தம பத்தினிகள் என்று சொல்லிக் கொண்டிருக்காதிர்கள். உங்களிலும் 'நீலாம்பரிகள்' இருக்கத்தான் செய்கிறீர்கள். சொல்லப் போனால் தப்பு செய்யாத மனித பிறவி யாருமே இல்லை.
எப்போதாவது ஒரு குறிப்பிட்ட பெண் உங்களுக்கு அநியாயம் செய்தால் பெண் குலமே இப்படித்தான் என்று எழுந்து போராடியிருக்கிறீர்களா? ...இல்லைத்தானே...?!
அதனால் ஒரு குறிப்பிட்ட ஆண் உங்களுக்கு எதிராக குற்றம் செய்கிறான்...அநியாயம் செய்கிறான் என்றால் அவனுக்கு எதிராக மட்டுமே வேலை செய்யுங்கள். தைரியத்துடன் தட்டிக் கேளுங்கள். அதை விட்டு விட்டு ஆண்களே இப்படித்தான் என்று அழகழகான வரிகளில் கட்டுரை எழுதாதீர்கள். ...உங்கள் அப்பாவும் அண்ணாவும் பாவம் அல்லவா? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?!