Friday, December 3, 2010

பெரியார் யார்?

ஈரோடு வேங்கட ராமசாமியாகப் பிறந்து 'பெரியார்' என்றே அழைக்கத்தக்க வகையில் பெரியாராக மதிக்கப்பட்டு இறந்துபோன ஒரு சாதாரண மனிதனின் சரித்திரத்தை எந்தவொரு சார்புமில்லாமல் 'பகுத்தறிவுடன் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.


ராமசாமிக்கு அவருடைய வாழ்நாளில் பல முகங்கள் இருந்தன. ஒரு சிறந்த வணிகர், கோவில் நிர்வாகி, அரசியல்வாதி, கட்சித் தலைவர் என்று நீளும் பட்டியல் இருந்தாலும் அவரே சொன்னபடி அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்தான். மனிதன் மட்டுமல்லாமல் எந்தவொரு உயிரினமும் தனக்கு தீங்கு நேர்கையில் டார்வினின் 'தப்பிப் பிழைத்தல்' கொள்கையின்படி அதிலிருந்து தப்பிப்பதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும். ராமசாமிக்கு அவருடைய சிறுவயதில் நிகழ்ந்த சம்பவங்கள் பின்னாளில் அவர் எப்படி வாழவேண்டும் என அடி எடுத்துக் கொடுத்தன. அவருடைய சிந்தனைக்கும் சுதந்திரத்திற்க்கும் எதிராக சமுதாயம் இருந்தபோது அவர் அதனை எதிர்க்க ஆரம்பித்தார்.


அவரது ஆரம்ப வாழ்க்கையை நோக்கும்போது அவர் ஒரு பணக்கார வியாபாரியின் கடைசி செல்ல மகனாகவும் குறும்புகளின்  கண்ணனாகவும்  இருந்திருக்கிறார்.வீட்டில் அவரது தொல்லை தாங்க முடியாது என்பதற்காகவே அவரை பாடசாலைக்கு அனுப்பிவிடுவார்கள்.அங்கே பெற்றோரினால் அனுமதி மறுக்கப்பட்ட சாதியினரிடம் எல்லாம் நீர் வாங்கி பருகியிருக்கிறார். அவர் வீட்டில் எப்போதும் பூசை புனஷ்காரம்  நடந்தவாறே  இருக்கும். அது அவரின் சுதந்திரத்திற்கு தடையாய்  இருந்திருக்கிறது.ஆச்சாரம், சடங்குகள் மிக நுணுக்கமாக கடைப்பிடிக்கப்படும் அக்குடும்பத்தில் குளிப்பதற்கு கூட வராமல் அடம்பிடித்திருக்கிறார். இதனால் பெற்றோர் இன்னும் கட்டுபடுத்தமுயல அதற்கு மேலாக அவர் அதனை உடைக்க முயற்சித்திருக்கிறார்.
தண்ணீருக்குள் அமிழ்த்தப்படும் பந்துதானே விரைவாக வெளியே வரும்.


பின்பு வாலிபனாக வளர்ந்தபோது பார்ப்பனர்களின் ஒழுக்கமின்மையும் தீய நடவடிக்கைகளும் அவர் உள்ளத்தை பாதித்தன. எளிய மக்கள் அவர்களால் இலகுவில் ஏமாற்றப்படுவதையும் சாதி, மதம் மற்றும் தீண்டாமை எனும் கரங்களாலும் அவர்கள் கழுத்து நெரிக்கப்படுவதாகவும் உணர்ந்தார். அதுவரை தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களைத் தட்டிக் கேட்டு அனுபவம் பெற்றவர். இப்போது மற்றவர்களுக்காகவும் தட்டிக் கேட்க ஆரம்பித்தார்.


ஒரு தடவை ஒரு பார்ப்பனரின் வீட்டில் முஸ்லிம் மதத்தவரை அழைத்துச் சென்று கலக்கம் செய்ததனால் தன் தந்தையினால் மற்றவர்கள் முன்னிலையில் முகத்தில் செருப்படி வாங்கினார். அதனால் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் காசி யாத்திரை புறப்பட்டார். அங்கே ஒரு பிராமணரால் அவர் ஒரு நாயக்கர் என்பதனால் உணவு கொடுக்கப்படாமல் வீட்டிற்கு வெளியே தள்ளிவிடப்பட்டார். இப்படியாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் பார்ப்பனர்களாலேயே அதிகம் பாதிக்கப்பட்டார். இது அவரை முழுமையாக அவர்களுக்கு எதிராக செயற்படத் தூண்டியது எனலாம்.


சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கும் அநீதியைக் கண்டால் உணர்வு பொங்கும்தான். எதிர்த்து போராட வெறி வரும்தான். இந்த மனித உணர்ச்சிகள்தான் எம்.ஜி.ஆர்.,ரஜினி,ஜாக்கிசான் படங்களை அவ்வளவு வசூலுடன் ஓட வைத்தன. ஆனால் இந்த வெறியை அவர்கள் வெளிப்படுத்துவது இல்லை. காரணங்கள் பல. அவற்றுள் முதன்மையானது தம்மைவிட பலமானவற்றை எதிர்த்தால் தங்கள் தற்போதைய இருப்புக்கே மோசம் வந்துவிடுமோ என்ற அச்சம். ஆனால் பெரியார் போன்ற ஒரு சிலர் 'அதிகபிரசங்கித்தனமாக' செயற்பட்டார்கள். அவர்களுக்கு தங்கள் சாதாரண இருப்பைவிட தங்களின் மனத்திருப்திதான் முக்கியமாகப்பட்டது. ஆனால் அந்த செயற்பாடும் ஒரு வரையறைகுட்பட்டதுதான் என அவர்களுக்கே தெரியாது.


ஏழைமனிதன்  போராட்டத்தில் இறங்கும்போது அவனது அடுத்தவேளை சாப்பாட்டிற்கே வேட்டு வைக்கப்படுகிறது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அதனால் இந்த சாதி, மதம், பேதம் எல்லாவற்றையும் சரியா பிழையா என ஆராய்ந்து பார்க்க கல்வி அறிவுமில்லாமல் பிழை எனத் தெரிந்தாலும் வயிற்றுப் பலவீனத்தினால் தன்னை சுற்றி எழுப்பப்பட்டிருந்த கோட்டையை தகர்க்கக் கூடிய சக்தியற்று இருந்தான். ஆனால்  பெரியாருக்கு உடல் ஆதரவுக்கு ஓரளவு செல்வமும் மக்கள் ஆதரவு தர கட்சியும் மன ஆதரவுக்கு மனைவியும் இருந்தனர். இந்த மூன்றும் அவருக்கு கை கொடுத்தாலும் அவர் தொடர்ந்து சுயமரியாதைக்கான போராட்டங்களை நடத்துவதற்கான அடிப்படைச் சக்தியாக இருந்தது அறியாமையினால் வீணாக அவதிப்படும் மக்களை எப்படியாவது காப்பாற்றவேண்டுமே என்கின்ற அடங்காத அவாவே என்றால் அது மிகையில்லை.


மதநீக்கம் (Secularisation) 


பெரியாரை நேரடியாகப் பாதித்ததும் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்ற அடங்காத அவாவை ஏற்படுத்தியதுமான பல காரணிகளில் பிரதானமானது அவரை சூழ இருந்த மதம்தான். அவர் மதத்தின் மீதான தன் நிலைப்பாட்டை  ஆராய முன் மதம் என்றால் என்னவென்று பார்த்துவிடலாம். 

 மதம் என்பது கடவுள் இருக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் கடவுள்தான் இந்த உலகத்தையும் அண்டசராசரங்களையும் படைத்தவர். எல்லாம் வல்லவர். இரக்கமுள்ளவர். முக்காலமும் அறிந்தவர். நாம் குற்றங்கள் செய்தால் தண்டிப்பவர். இவை எல்லா மதத்திற்கும் பொதுவான விடயங்கள். நாத்திகம் என்பது இதற்கு நேர் எதிரானது. விஞ்ஞான ஆய்வுகளின்படி பகுத்தறிவின்படி கடவுள் என்பவர் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுவது. இந்த இரண்டில் பெரியார் எந்தப் பக்கம் என ஆராய்ந்தால் மேலோட்டமாக பார்த்தால் அவர் ஒரு நாஸ்திகராக தோற்றமளிப்பார். ஆனால் அது உண்மையில்லை. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதைப் பற்றி தத்துவரீதியாகவோ விஞ்ஞானரீதியாகவோ ஆராயாமல் மதத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளுக்காக மட்டுமே மதத்தை , கடவுளை இல்லை என்றார். என்னை பொறுத்தவரையில் அது அவர் செய்த தவறு.


கடவுள் என்கின்ற எண்ணக்கருவை நம்புவது என்பது அடிப்படை மனிதத் தேவைகளில் ஒன்று. நம்மை சிறுவயதில் யாரும் அடித்தால் அம்மா என்று அழைத்தோம். உண்மையில் அப்போது அம்மா நம்மைக் காப்பாற்றுவார் என உளமார நம்பினோம். வாய்ப்பும் இருந்தது. ஆனால் வளர்ந்த பிறகும் ஆபத்தின்போது "அம்மா, ஐயோ!" என்றுதான் அழைக்கிறோம். அம்மா நிச்சயமாக அந்த இடத்திற்கு வரவோ அல்லது காப்பாற்றவோ நூறு சதவிகிதம் சாத்தியம் இல்லை என்றாலும் அவ்வாறுதான் செய்கிறோம். அப்போது அம்மா என்பதன் பொருள் யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன் என்பதுதான். பக்கத்தில் யாராவது இருந்தால் அவர்களை அழைப்போம். அப்படி யாரும் இல்லாதவிடத்தில்தான் அதுவும் கடைசியாகத்தான் நாம் கடவுளை அழைக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் கடவுளை நம்பாதவன்கூட "ஐயோ, கடவுளே" என்று சொல்வதைக் கண்டிருக்கிறோம். சிறுவயதில் அம்மாவும் வளர்ந்தபின் கடவுளும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது நம்பிக்கை மட்டுமல்ல. தேவையும் கூட. டார்வினின் கொள்கைப்படி மனிதப்பிராணி ஆபத்துக்களிலிருந்து தப்பித்தே ஆகவேண்டும்.


கடவுள் இல்லாத உலகத்தை சாதாரண மனிதர்களால் மட்டுமல்ல,விஞ்ஞானிகளால் கூட கற்பனை பண்ணும்போது மயக்கமும் குழப்பமும் ஏற்படுகிறது. கடவுள் இல்லை என்றால் இந்த உலகத்தை படைத்தது யார்? அல்லது உருவானது எப்படி? கடவுள் இல்லை என்றால் நல்லவர்களை ஆபத்தில் இருந்து  காப்பாற்றுவது யார்? தீயவர்களைத் தண்டிப்பது யார்? கடவுளும் இறை நம்பிக்கையும் தண்டனையும் இல்லாவிட்டால் உலகில் குற்றங்கள் பெருகிவிடாதா?


மேற்கண்ட கேள்விகள் மற்றும் தேவைகள் பெருகியதாலேயே மனிதன் கடவுளைப் படைத்தான். ஆனால் அவன் பெரியார் சிந்தித்ததுபோல சதித்திட்டம் ஒன்றும் தீட்டவில்லை. ஆரம்பகால மனிதன் இடி, மின்னல், மழை போன்றவற்றை அதாவது தன் புத்தியால் விளக்க முடியாதவற்றை அப்போதைய அவனது புத்தியின் அளவைக் கொண்டு  இவை எல்லாவற்றிற்கும் காரணம் கடவுள்தான் என்று சொல்லிவிடுவது இலகுவாக இருந்தது.


கடவுள் இருக்கிறாரா,இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்வது மிகக் கடினம். இருக்கிறார் என்றால் எங்கே காட்டு என்பார்கள். இல்லை என்றால் இந்த உலகம் எப்படித் தோன்றியது சொல் என்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இன்றைய மதங்கள் விவரிப்பது போல கடவுள் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தாலும் அவரை வணங்க வேண்டிய அவசியமில்லை. பொறுங்கள். குழம்ப வேண்டாம்.


கடவுளைப் பற்றிய அடிப்படை எண்ணக்கருக்களை சற்று ஆய்வு செய்யலாம். முதலாவது கடவுள் நல்லவர் என்பார்கள். ஆனால் இந்த நல்ல கடவுள்தான் இந்த உலகிலுள்ள தீய விடயங்களையும் படைத்தார். ஏனெனில் எல்லாம் அவன் செயல். இரண்டாவது வல்லவர் என்பார்கள். அவர் வல்லவராய் இருந்து என்ன பயன்? அள்ள அள்ளக் குறையாத செல்வங்களைத் தன்னிடம் வைத்திருந்தும் அவற்றை மனிதன் அனுபவிக்கத் தராமல் மனிதன் நெற்றி வேர்வை  நிலத்தில் விழ உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்று விதித்திருக்கிறார். தருவதென்றால் அவருக்கு கோவில் கட்டிக் கும்பிட வேண்டுமாம். கேட்டால்தான் ஏதோ கொஞ்சம் கிள்ளிப் போடுவார்.அவ்வளவு வல்லவராய் இருக்கிறவர் இருக்கும் தீய விடயங்களை ஒரே வினாடியில் அழித்துவிட்டு எல்லா மனிதர்களையும் அனுபவிக்க விட்டிருக்கலாமே? முக்காலமும் அறிந்தவராய் இருந்தால் எம்மை அப்படிச் செய்யாதே, இப்படிச் செய்யாதே என்று ஆணையிட்டு என்ன பிரயோசனம்? என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது எல்லாமே அவர் எழுதிவைத்த தலை எழுத்துத்தானே.அதை நாங்கள் மாற்றி நடக்க வேண்டும்?     எல்லாவற்றையும் விட ஏன் அவர் நம் கண்ணில் படாமல் ஒளிந்திருக்க வேண்டும்? எங்களிடம் அவருக்கு என்ன பயம்? நாங்கள் அவரது படைப்புத்தானே? அல்லது எங்கள் முன்னால் வந்தால் அவரது மதிப்பு குறைந்துவிடுமா? அவர் ஒரே ஒரு தடவை நம் எல்லோர் முன்பும் வந்து 'நான்தான் கடவுள்' என்றும் குறிப்பிட்ட மதம்தான் சரியானது என்று சொல்லிவிட்டு சென்றால் இவ்வளவு குழப்பம் தேவை இல்லையே.


எனவே இன்றைய மதங்கள் கற்பிப்பது போன்ற கடவுள் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவர் மேற்சொன்ன குறைபாடுகளைக் கொண்ட கடவுளாகத்தான் இருப்பார். அவரை வணங்க வேண்டிய அவசியமில்லை. சிலவேளைகளில் இந்த அண்டம் முழுவதையும் ஒரு சக்தி இயக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது அளவிடக்கூடிய விஞ்ஞான ரீதியான சக்தியாக இருக்குமே ஒழிய தன்னை வணங்கச் சொல்கின்ற, கோவித்துக் கொள்கின்ற, கல்யாணம் முடித்து பிள்ளைகள் பெற்றுக் கொள்கின்ற அதாவது மனித சுபாவங்கள் கொண்ட சக்தியாக இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் என் கருத்து. 


சரி. கடவுளை நம்புவதாலும் மதத்தை பின்பற்றுவதாலும் எவ்வித நன்மையும்  இல்லையா? உண்டு. கடவுள் நம்பிக்கை என்பது தன்னம்பிக்கையின் இன்னொரு வடிவம். நல்லதே நடக்கும், தர்மம்தான் கடைசியில் ஜெயிக்கும் போன்ற நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். குற்றங்கள் செய்யப்படும் வீதத்தை குறைக்கும். ஆன்மிகம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்தும். சக மனிதர்களை நேசிக்கச் சொல்லும். ஆனால் அதுவே தன் சொந்த மதத்தின்மீது மதம் பிடிக்க வைக்கும் வேலையைச் செய்யும்போது அதனை எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.  


எல்லா மதத்தின் அடிப்படை நாதமே அன்புதான். இந்த உலகத்தை படைத்ததே ஒரு கடவுள்தான். அப்படியானால் மனிதர் யாவருமே அவருடைய பிள்ளைகள்தான். ஆகவே நாம் சகோதரர்களாகத்தானே வாழவேண்டும்? ஆனால் அதனை மறந்து மற்ற மதங்களின்மீதான வெறுப்பு அதிகரித்து சகிப்புத்தன்மை குறையும் நிலை இருக்கிறது. தன் கடவுள்தான் உண்மையானவர். மற்ற கடவுள்களை நம்புகிறவர்கள் எல்லோரும் மடையர்கள், காட்டுமிராண்டிகள் என்ற மனப்பான்மையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சிறுவயதிலிருந்தே அவரவர் மதத்தினால் ஊட்டி வளர்க்கப்படுகிறது. 


உன் மதம்தான் உண்மையானது என்பதற்கு உன்னிடம் இருக்கும் ஆதாரம் என்னவென்றால் பதில் அது என் பெற்றோரின் மதம் என்பதுதாகவும் அம்மதத்தின் புனிதநூல் அவ்வாறு கூறுகிறது என்பதாகத்தான் இருக்கும். கனவில் கடவுளைக் கண்டேன், கடவுள் என்னைக் குணமாக்கினார் என்பவர்கள் எல்லாம் உளவியல் மருத்துவர்களிடம் செல்ல வேண்டியவர்கள். இது சத்தியமாக ஜோக்கல்ல. நான் என் பெற்றோரின் மகனாகப் பிறந்ததினால் சிறுவயதிலிருந்தே என் மதத்தைக் கடைப் பிடிக்கிறேன். நான் பிறக்கும் முன்பே நான் எந்தக் கடவுளை நம்ப வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. நாம் பிறந்து வளரும்போது அம்மதத்தின் சூழலிலேயே இருப்பதனாலும் அம்மதத்தின் நல்ல விடயங்களை அறிந்து கொள்வதாலும் அதன்மீது பற்று நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. அத்துடன் மற்ற மதங்களின்மீது மதிப்பு குறைவதற்கு காரணங்களாக  நாம் நம் மதத்தை அறிந்துகொண்ட அளவுக்கு அறியவில்லை அல்லது அறிவதற்கு முயற்சி எடுப்பதில்லை அல்லது வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பவற்றைக் குறிப்பிடலாம்.  இன்னொன்று உண்டு. எப்போதுமே மனிதனுக்கு தனது சொந்த விடயங்களை பாதுகாப்பதில் டார்வினின் கொள்கைப்படி அக்கறை உண்டு. தனது பண்பாடு, கலாச்சாரம், இனம், தேசியம், இவற்றை அவன் எவ்வளவு அக்கறையாக மதிக்கவும் பாதுகாக்கவும் தயாராக இருப்பானோ அதே அளவு தன் மதத்தின்மீதும் மிகுந்த பற்று வைத்திருப்பான். அது அவனுக்கு ஒரு அடையாளம். அதன் மதிப்பு குறைந்து போனால் அது அவனுக்கு ஒரு அவமானம். சிறு வயதிலிருந்தே நாம் மதித்துவரும் ஒரு பொருளை யாராவது மட்டந்தட்டிப் பேசும்போது நமக்கு கோபம் வருவது இயல்புதானே. தன் பெற்றோரின் மதத்தை இழிவுபடுத்துவது அவனுக்கு தன் பெற்றோரையே இழிவுபடுத்துவதுபோலத்தான் இருக்கும். இதே விடயங்கள் எல்லா மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் இருப்பதனால் அவர்களிடையே மோதல்கள் எழுவதற்கு சாத்தியங்கள் அதிகமாகின்றன.


எந்த மதம் உண்மையானது என்பதை ஆராய்வதற்கு ஒருவன் தன் மதத்தினின்றும் வெளியே வந்து நிர்வாணமாக சிந்திக்க வேண்டும். அவனது அச்சிந்தனையில் அவனது மதம் செல்வாக்கு செலுத்தக்கூடாது. இது கலாச்சாரம், சாதி, மொழி, நாடு ஆகியவற்றின் மீதான சிந்தனைகளுக்கும் பொருந்தும். 


மொழி  

பெரியாரின் மொழி சம்பந்தமான கருத்துக்கள் வரலாற்றில் பெரியோர்களினால் அரிதாகத்தான் கூறப்பட்டிருக்கின்றன. அதிலும் பெரியாரின் கருத்துக்கள் மிகவும் முற்போக்கானவை. மிகப் பெரும்பாலானவர்களால் சகிக்கக்கூட முடியாதவை. ஆனால் என்னால் முற்றிலும் விரும்பப்படுபவை. மொழி பற்றிய பெரியாரின் கருத்து பின்வருமாறு.

"மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனமல்ல. அது இயற்கையானதுமல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை. மொழி மனிதனுக்கு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு விஷயங்களை புரிந்துகொள்ள  வாய்ப்பளிக்கும் அளவுக்கு தேவையானதே ஒழிய பற்றுக் கொள்வதற்கு அவசியமானதல்ல. "

எவ்வளவு தெளிவான ஒரு விளக்கத்தை பெரியார் அளித்திருக்கிறார். சொந்தக் கலாச்சாரம், இனம், சாதி, நாட்டில் ஒரு மனிதன் எவ்வளவு பற்று வைத்திருக்கிறானோ அதே அளவு தன் மொழிமீதும் வைத்திருக்கிறான். ஆனால் மொழிமீது அவ்வளவு பற்று வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? தான் பிறக்கும்போது கிடைத்த மொழி என்பதாலேயே பலரும் அதனை நேசிக்கிறார்கள் அல்லது சிறுவயதிலிருந்தே நேசிக்கப் பழக்கப்படுகிறார்கள். 

மொழிகளை ஆராய்கையில் சில மொழிகள் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் சிறப்பான இலக்கண இலக்கியங்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று. நம் மொழிக்கு சிறப்பு இருப்பதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அது அச்சிறப்பினை பெறுவதற்கு நாம் இம்மியளவேனும் எதேனு செய்திருக்கிறோமா? அது கால ஓட்டத்தில் மற்ற செம்மொழிகளைப் போலவே தற்செயலாக அமைந்துவிட்டது. ஏதேனும் சில மொழிகள் கட்டாயம் பழைமை வாய்ந்த மொழிகளாக இருப்பது கால ஓட்டத்தின் நிகழ்தகவில் நடந்தே தீரும். இதிலென்ன பெருமை வேண்டியிருக்கிறது?
மொழி என்பது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சொல்ல வேண்டிய விடயத்தை கொண்டு செல்லும் ஒரு ஊடகம் மட்டுமே. எல்லோருக்கும் அவரவர் பிறந்த சூழலினால் ஒவ்வொரு மொழி கிடைத்திருக்கிறது. உண்மையில் அது உன் தாய் மொழி அல்ல. அது நீ பிறந்து வளர்ந்த இடத்து மொழி. நீ இங்கே பிறந்து ஆப்பிரிக்காவில் வளர்ந்திருந்தால் நீ இப்போது கேட்டுச் சிரிக்கும் ஆப்பிரிக்க காட்டு மொழி ஒன்றைப் பேசியபடி அத பெருமைகளை பறைசாற்றியபடி இருந்திருப்பாய். 'மொழிகள் தனித்தனியாகப் பிரிவதும் மொழிக்குள்ளேயே வழக்கு வேறுபாடுகள் ஏற்படுவதும் தட்பவெப்பச் சூழல், போக்குவரத்தின்மை, பிறமொழிக் கலப்பு ஆகியவற்றின் விளைவுதான்' என பெரியார் குறிப்பிட்டார்.  

மொழி என்பது இறுக்கமான வரையறைகளைக் கொண்டிருக்கக் கூடாது என்பதில் பெரியார் தெளிவாக இருந்தார். 'காலம்தோறும் மொழி அமைப்பிலும் வரி வடிவத்திலும் சொற்களஞ்சியத்திலும் உச்சரிப்பிலும் மாற்றம் ஏற்படுவது இயல்பு. எனவே மொழியில் மாற்றங்கள் செய்யக்கூடாது என்பது மடமை' என்றார். அவரே நேரடியாக மொழி வல்லுனர்களின்  எதிர்ப்பையும் மீறி திருத்தம் செய்தார்.  

உண்மையில் மொழியைப் பெருமை பேசி அதன் 'மறுமலர்ச்சி' நடந்துகொண்டிருந்த ஒரு காலப்பகுதியில் பெரியார் தமிழை ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். அது அவர் தன் கருத்தை வலியுறுத்த அல்லது நன்றாக உறைக்க வேண்டும் என்பதற்காக சொன்னார். ஆனால் மொழியின் சதியை அவர் புரிந்து கொள்ளவில்லை. தமிழ் மொழி ஒருபோதும் சாதியை ஒழிக்கப் பயன்படவில்லை என்ற கோணத்திலேயே அவர் அவ்வாறு கூறினார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனக் கூறினால் அதனை பேசும் தமிழர்களும் காட்டுமிராண்டிகள்தானே என 'சுத்தத் தமிழர்கள்' எடுத்துக் கொண்டனர்.   தன் கருத்தை வலியுறுத்துவதற்காக தன் சத்தத்தை அதிகரித்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது மடமை. அனேகமாக அதைத் தெரிந்து வைத்திருந்த பெரியாரே சில சமயங்களில் 'ஓவர் அக்டிங்' செய்திருக்கிறார். வெங்காயம் என்ற அவரது பிரபல வார்த்தைப் பிரயோகமும் ராமர், பிள்ளையார் சிலை உடைப்புக்களும் இதற்கு உதாரணங்கள். நீங்கள் ஒருவனுக்கு மிக மிகச் சரியான கருத்தைக் கூறினாலும் அது அவனுக்கு மிக மிகப் பயன்படும் என நீங்கள் கருதினாலும் அதைச் சொல்லும் முறையில் சொன்னால்தான் அது அவன் காதில் ஏறும். எப்போதுமே அறிவுரைகள் கசப்பானவைதான்.

ஒரு விடயத்தை அதிரடியாக எதிர்க்கும்போது அல்லது காலம் காலமாக சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வந்த விடயங்களைப் பற்றி தலைகீழான கருத்துக்களைக் கூறும்போது நிதானத்தைக் கடைப்பிடித்தல் நன்று. எப்படியாவது மனமாற்ற வேண்டுமே என்கின்ற வெறியில் தீவிரமான நடவடிக்கைகளில் நாம் ஈடுபடும்போது அதன் தீவிர புதுமைக் கருத்துக்களால் கவரப்பட்ட ஒரு சில குழுவினரே நம்முடன் இணைந்து கொள்வர். பரந்த அளவிலான நிரந்தரமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் நிதானமும் பொறுமையும் அவசியம். உங்கள் மனதில் தோன்றிய அந்த புதுக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வதற்கான அறிவு மட்டுமல்லாமல் சந்தர்ப்பங்களும் தேவைகளும் உங்களுக்கு சந்தர்ப்பவசத்தால் அமைந்ததனால்தான் நீங்கள் அவற்றை நம்புகிறீர்கள். அப்படி அமையாத மற்றவர்கள் உடனடியாக அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று எப்படி நீங்கள் தீர்மானிக்க முடியும்? அதுவும் அக்கருத்தை ஏற்றுக் கொள்வதனால் அவர்களுக்கு தீமை விளைகிறது என்னும்போது இன்னும் அது சாத்தியம் இல்லாமல் போகின்றது.

சமுதாயத்தில் சிலவிடயங்களை மாற்ற விரும்பும்போது அதன் ஆணிவேரைப் பற்றிய ஒரு பரந்த ஆய்வு மனப்பான்மை வேண்டும். ஏன் அவை இவ்வளவு காலமும் வேரூன்றி அழியாமல் இருக்கின்றன என்றும் அதனால் தீமைகளைத் தவிர நன்மைகளும் உண்டா என்றும் அலச வேண்டும். உண்மையில் எந்த ஒரு சமுதாயமோ அல்லது ஒரு மனிதனோ தனக்கு ஒரு நன்மை கிடைக்காமல் எந்த ஒரு விடயத்தையும் தொடந்து பின்பற்றாது.ஆனால் அது இக்காலத்திற்கு பொருத்தமானதா என்றும் எல்லா தனி மனிதருக்கும் அந்த விடயத்தைப் பிரயோகித்து அதனை செய்யும்படி வற்புறுத்துவது சரியாய் என தீர்மானிப்பது இங்கு முக்கியமானதாகும்.

இன்னும் ஆராய்ந்தால் தேவை இல்லாதது நிச்சயம் காலப் போக்கில் அழிந்து போகும். அது பரிணாம முடிவு. பழைய விடயங்களை அழித்து புது விடயங்களை புகுத்த விரும்பும் எவரும் இயற்கையின் பரிணாமத் தத்துவத்தின் செயற்பாடுக் கருவிகள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே பரிணாமத்தின் கருவிகள்தானா என ஆராய்வது முக்கியம்.  

மொழியை வளர்த்தல் என்கிற இன்னொரு விடயமும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மொழியின் பரப்பு என்பது காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் தானாக வளர்கிறது. மொழி வளர்ச்சி என்பது ஏற்கனவே உள்ள சொற்களுக்கு ஒத்த சொற்களை உருவாக்குவதில்லை. ஒரே அர்த்தத்தைக் தரக்கூடிய பத்துச் சொற்கள் இருந்து பிரயோசனமில்லை. அப்படி இருப்பது கவிதை எழுதுபவர்களுக்கு நன்மையளிக்கலாம். ஆனால் மொழியைக் கற்பவருக்கு அது மேலதிக சிரமத்தைக் கொடுக்கும். மொழி காலத்திற்கேற்ப புதுப் புதுச் சொற்களை இயல்பாகவே மக்களிடையே உருவாக்கிக் கொள்ளும் அல்லது பிற மொழிகளிருந்து உள்வாங்கிக் கொள்ளும். உதாரணமாக ஆங்கிலச் சொற்களான ஐஸ் க்ரீம், சைக்கிள் போன்றவை சாதாரண மக்களால் கூட பாவிக்கப்படும் தமிழ் சொற்கள் போல மாறிவிட்டன. இவற்றிற்கு கட்டாயம் புதுத் தமிழ்ச் சொற்களை உருவாக்கி ( குளிர்களி, உந்துருளி) கட்டாயமாக செருகி பாவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கணணி மற்றும் அறிவியல் தொழிநுட்பவியலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் விடயங்களுக்கு நாம் புதுத் தமிழ்ச் சொற்களை உருவாக்கவேண்டியுள்ளது. ஆனால் அவற்றிற்கு கூட அந்த ஆங்கிலச் சொற்களையே நாம் பாவிக்கலாம் என்பது என் கருத்து. அத்துறையைப் பற்றிப் படிப்பவருக்கு இரண்டு சொற்களை ஒரே விடயத்திற்காக மனனம் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போகும். அதாவது தொடர்பாடலை மிகச்சரியாக மேற்கொள்ள பொருத்தமான சொற்களை அல்லது மொழியை பாவித்தாலே போதும். அது கட்டாயம் நம் தாய் மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.     

I AM ADAM GOD...

HELLO...MY DEAR PEOPLE...!

I LIKE TO SPEAK LOT WITH YOU AND LIKE TO SHARE LOT OF MY FEELINGS. HOWEVER I PREFER TO GET FEEDBACK LOT THAN WHAT I TALK TO YOU...DEFINITELY. MY BLOG WILL BE LTTLE BIT OF DIFFERENT THAN AMONG THE OTHERS. YOU MIGHT NOT ACCEPT WHAT I SAY. SOMETIMES YOU COULD NOT ENDEAVOUR MY OPINIONS...GOOD...I PREFER THE WAVES OF A SEA THAN THE SILENT GARBAGE GUTTER..OK...SHALL WE START...?